மது அருந்த அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்ததால் நண்பனை வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் 20 வயதான தயாளன். இவர் பொருளாதாரம் 3ம் ஆண்டு படித்துவருகிறார். இவர் வீட்டிற்கு அருகே உள்ள பழைய நூலகம் கட்டிடம் அருகே நின்று கொண்டிருந்த போது தீடீரென 4 பேர் கொண்ட கும்பல் தயாளனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், தயாளனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் விசாரணை செய்ததில், அவரது சக நண்பர்கள் 4 பேர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தயாளன் அடிக்கடி தங்களை தொடர்பு கொண்டு, மது அருந்துவதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிவித்துள்ளனர். பணம் தரவில்லை என்றால் சரக்கு வாங்கி தர சொல்லி நச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் தயாளனை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆவடியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் கல்லூரி மாணவரை ஒருவருக்கொருவர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







