ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சியாளர்களைக் கொண்டு இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகின்றனர் இளைஞர்கள் சிலர். யார் அவர்கள்?
இன்றைய சூழலில், பள்ளி – கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுவதோடு படிப்பிலும் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த முட்டத்தூர் கிராமத்து இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களை ஆன்லைன் விளையாட்டிலிருந்து மீட்க முடிவு செய்தனர்.
அதற்காக சிறப்புப் பயிற்சியாளர்களை அழைத்து வந்து தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம் பயிற்சியைத் தொடங்கினர். முதலில் 20 மாணவர்கள் வந்த நிலையில் தற்போது 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் சிலம்பத்தில் சேர்ந்து சிறப்பாகப் பயிற்சி பெற்று வருகின்றனர். உடல் ஆரோக்கியம் மற்றும் ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவுவதால், சிலம்பப் பயிற்சி பெறுவதாகத் தெரிவிக்கின்றனர் மாணவர்கள். ஒவ்வொரு கிராமங்களிலும் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்ப பயிற்சி அளிக்க, அரசு நடவடிக்கை எடுத்தால் எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே முட்டத்தூர் கிராமத்து இளைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.









