CA தேர்வர் ஒருவருக்கு அவரது நண்பர் அளித்த கேக்கின் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
யாராக இருந்தாலும் தேர்வுக்கு முந்தைய நாள் டென்ஷனாக இருப்பது சாதாரணம். தேர்வு நாள் நெருங்கியதால் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பர். இதனால் சோர்வடையவும் செய்கின்றனர். இந்த நேரத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் அட்வைஸ் சொன்னாலும் அதைக் கேட்கும் பொறுமை தேர்வர்களுக்கு இருப்பதில்லை.
இது போன்ற டென்ஷனான நேரத்தில் மனம் புத்துணர்ச்சி அடையும்படி பரிசு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுபோன்ற ஒரு பரிசு பட்டயக் கணக்கியல் (Chartered Accountant) தேர்வு எழுதப் போகும் நபருக்கு கிடைத்திருக்கிறது. நாளை சிஏ தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு எழுத தயாராக இருக்கும் நபர் ஒருவருக்கு தனது நண்பரிடம் இருந்து பரிசு ஒன்று வந்துள்ளது. அவர் கேக் ஒன்றை பரிசாக பெற்றுள்ளார்.
அந்த கேக்கை பார்த்து மகிழ்ச்சியடைந்த அந்த நபர், அதன் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த கேக் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் அந்த பதிவில், “நாளை சிஏ தேர்வு, என் நண்பர் என்ன கொடுத்திருக்கிறார் பாருங்கள்” என்று தலைப்பிட்டார். அவர் பகிர்ந்த புகைப்படத்தில் ஒரு வெள்ளை நிற கேக்கைக் காணலாம்.
அதன் மேலே மைக்ரோசாஃப்ட் எக்செல் பச்சை லோகோ உள்ளது. மேலும், அந்த கேக்கில் “ஃப்ரீக் இன் தி ஷீட்” என எழுதப்பட்டுள்ளது. அதாவது “உனக்கு 80 சதவீதம் எக்செல் சீட்டில் தான் வேலை” என தெரிவித்துள்ளார். பட்டயக் கணக்கியல் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எக்செல்லில் தான் வேலை செய்வர். அந்த வகையில், அந்த நபருக்கு கண்டிப்பாக வேலை கிடைத்திடும் என்பதை அவரது நண்பர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.







