நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க வைப்பதாக கூறி மாடல் அழகியிடம் பண மோடிசயில் ஈடுபட்ட மோசடி கும்பலை தீவிரமாக தேடுவருகிறது காவல்துறை. நடந்தது என்ன? இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் “ஜெயிலர் “. நெல்சன் இயக்கத்தில் இந்த படம் தயாராகி வருகிறது. நடிகர் ரஜினி காந்துடன் மோகன்லால், சிவராஜ் குமார், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன் உள்பட பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர். எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மும்பையை சேர்ந்த மாடல் அழகி ஒருவரை மோசடி செய்து ஏமாற்றி உள்ளது கும்பல் ஒன்று.
மும்பை வெர்சோவா பகுதியில் வசித்து வருபவர் மாடல் அழகி சன்னா சூரி. மும்பையில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 2007-ம் ஆண்டு மிஸ் மகாராஷ்டிரா பட்டம் வென்றவர். இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பியூஸ் ஜெயின் என்பவர் அறிமுகமாகி உள்ளார். தாங்கள் ஜெயிலர் படத்தில் பணியாற்றி வருவதாகவும், அந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க பெண் தேவை என்றும் கூறி சன்னா சூரியிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய அவர் போலீஸ அதிகாரி போல நடித்து ஒரு வீடியோவை தயார் செய்து பியூஸ் ஜெயினுக்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து அவர் மாடல் அழகி சன்னா சூரிக்கு ஒரு போஸ்டர் அனுப்பி உள்ளார். அதில் நடிகர் ரஜினிகாந்த்துடன் ஜெயிலர் படத்தில் சன்னா சூரி இருப்பது போன்ற போஸ்டர் இருந்தது. இதனை பார்த்ததும் சன்னா சூரிக்கு சந்தோஷத்தில் மிதந்தார். ரஜினியுடன் நடிப்பதை நம்பி என்ன செய்வது புரியாமல் மகிழ்ச்சி கடலில் மிதந்தார் சன்னா சூரி.
அந்த போஸ்டரை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் நடிகர் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2 பாகத்தில் நடிக்க வைப்பதாகவும் மாடல் அழகி சன்னா சூரியை நம்ப வைத்துள்ளார். மேலும் சமீர் ஜெயின் என்பவரை அறிமுகம் செய்து இவர் இயக்குநர் என்றும், மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாகவும் நம்ப வைத்துள்ளார்.
சில ஒப்பந்த ஆவணங்கள், துபாய் செல்ல டிக்கெட் போன்றவற்றை பியூஸ் ஜெயின் அனுப்பி வைத்ததோடு படப்பிடிப்புக்கு பாரிஸ் செல்லவேண்டும் என்றும், அதற்கு விசா கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் கூறி செலவாக ரூ.8 லட்சத்து 48 ஆயிரத்தை அனுப்பி வைக்கும்படி மாடல் அழகி சன்னா சூரியின் தாயார் வனிதாவிடம் கேட்டுள்ளார்.
அவரை முழுமையாக நம்பிய வனிதாவும் அவரது மகள் சன்னா சூரியும் பணத்தை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் துபாய்க்கு அனுப்பாமல் பியூஸ் ஜெயின் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தான் ஜெயிலர் படத்தின் உதவி இயக்குனர் ஒருவர் சன்னா சூரியை தொடர்பு கொண்டு ஜெயிலர் படத்தின் போலி போஸ்டரை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளீர்கள் உடனே அதனை நீக்குங்கள் என்று கூறியுள்ளார்.
ஜெயிலர் படத்தில் நடிக்க பியூஸ் ஜெயினுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக அவர் உதவி இயக்குனரிடம் தெரிவித்தார். பியூஸ் ஜெயின் என்ற பெயரில் யாரும் ஜெயிலர் பட அணியில் இல்லை என்று தெரிவித்ததை கேட்டதும் மாடல் அழகி சன்னா சூரி மிகுந்த அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பியூஸ் ஜெயினை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் தொடர்பை துண்டித்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
இதன் பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாடல் அழகி சன்னா சூரி மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், காஸ்டிங் இயக்குனர்கள் என தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். மோசடி நபர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளை வைத்து அவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி உள்ளனர்.
சன்னாவோ அல்லது அவரது தாயாரோ பியூஸ் ஜெயினையோ அல்லது அவனை கூட்டாளியையோ பார்க்கவே இல்லை. வாட்ஸ்அப் காலில் மட்டுமே அவர்களுக்கு பேச்சுவார்த்தை நடந்திருப்பது விசாரணையில் தெரிந்து காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்….!!!!!!







