உலகின் மிக வயதான நபரான பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஆண்ட்ரே தனது 118வது வயதில் காலமானார்.
லூசில் ராண்டன் என்ற இயற்பெயர் கொண்ட கன்னியாஸ்திரி ஆண்ட்ரே, 1904ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1944ஆம் ஆண்டு, கத்தோலிக்க கிறிஸ்தவ அறக்கட்டளையில் சேர்ந்தபோது ஆண்ட்ரே என்ற பெயரைப் பெற்றார். இரண்டாம் உலகப் போரின்போது குழந்தைகளை பராமரித்து வந்த இவர், 28 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோரை பராமரிப்பதில் செலவிட்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி தனது 118வது பிறந்தநாளைக் கொண்டாடிய இவர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துக் கடிதம் ஒன்றை பெற்றிருந்தார். ஜெரண்டாலஜி ரிசர்ச் குரூப்பின்(GRG) உலக சூப்பர் சென்டெனரியன் தரவரிசைப் பட்டியலின் படி, கன்னியாஸ்திரி ஆண்ட்ரே உலகின் மிக வயதான நபராக அறிவிக்கப்பட்டார். ஏப்ரல் 19, 2022 அன்று ஜப்பானியப் பெண்ணான கானே டனகா, தனது 119 வயதில் இறந்த பிறகு ஆண்ட்ரே உலகின் மிக வயதான நபரானார்.
இந்நிலையில், கன்னியாஸ்திரி ஆண்ட்ரே தனது 118வது வயதில் காலமானார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெல்லா, உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணியளவில் அவர் காலமானதாக தெரிவித்தார். மேலும், “இது பெரும் சோகத்தை அளித்துள்ளது. ஆனால் இதை கன்னியாஸ்திரி ஆண்ட்ரே விரும்பினார். தனது அன்பான சகோதரனுடன் சேர வேண்டும் என்பது அவருடைய ஆசை. அவரைப் பொறுத்தவரை, இது அவருக்கு கிடைத்த சுதந்திரம்” என்று தெரிவித்தார்.
கன்னியாஸ்திரி ஆண்ட்ரே காலமானதை அடுத்து, அமெரிக்காவில் பிறந்த ஸ்பானிஷ் சூப்பர் சென்டெனரியரான, 115 வயதாகும் மரியா பிரனியாஸ் மோரேரா உலகின் மிக வயதான நபராகியுள்ளார்.







