சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து கொண்ட வடசென்னை பழையவண்ணாரப்பேட்டை தனியார் பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஒருவரின் வாழ்க்கையில் பள்ளி பருவம் என்பது என்றும் மறக்க முடியாத ஒன்று. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அந்த பசுமையான நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். பள்ளி காலத்தில் கிடைத்த கள்ளங்கபடமற்ற நட்பு, வாழ்க்கை பயணத்தில் எங்கும் கிடைக்காது. சிறுவனாக இருந்த போது ஏதும் அறியாமல் ஆடிப் பாடி ஓடி விளையாடிய நண்பர்களை பல ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பது என்பது ஓரு வரம் தான்.
வடசென்னை பழையவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள பி ஏ கே பழனிசாமி தனியார் பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 1992−1993 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பயின்ற 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் சந்தித்து கொண்டனர். சிறுவனாக பார்த்து பழக்கப்பட்டவர்கள் பெற்றோராக மாறிய நிலையில் முதலில் அடையாளம் காண்பதில் சிறு குழப்பம் ஏற்பட்டது. எனினும் சுதாரித்து அடையாளம் கண்ட போது மகிழ்ச்சியில் அவர்கள் துள்ளிக்குதித்தனர்.
தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை சந்தித்த மாணவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். மேலும் அவர்கள் ஆசிரியர்களோடு செல்பி எடுத்தும், ஆட்டோகிராப் வாங்கியும் மகிழ்ந்தனர் . அப்போது பழைய நினைவுகளை அவர்கள் ஆசியர்களுடன் பகிர்ந்து கொண்டனர். தங்கள் குடும்பம், பணி தொடர்பாக பல்வேறு தகவல்களை அவர்கள் எடுத்துரைத்தனர்.பின்னர் மாணவர்கள் அனைவரூம் ஆசிரியர்களோடு குரூப் போட்டோ எடுத்து
கொண்டு ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர் . காலங்கள் கடந்தும், கற்பித்த ஆசிரியர்களை கண்டதும் காலில் விழுந்த அந்த தருணம் காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






