முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுதினத்தையொட்டி குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தவர் அடல் பிஹாரி வாய்பாய். ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வாஜ்பாயின் அரசியல் காலம் 40 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. அவர் ஒன்பது முறை மக்களவைக்கும், இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே ஒரு பெரிய சாதனைதான் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் இவரின் பங்கு உண்டு.
இவர் தனது வாழ்க்கையை ஒரு பத்திரிக்கையாளராக தொடங்கினார். பின்னர் அரசியலில் நாட்டம் ஏற்பட்டு ஜன சங்கத்தில் சேர்ந்தார். இந்த ஜனசங்கம் தான் இன்று பாரதிய ஜனதா கட்சியாக மாறியுள்ளது. வாஜ்பாய் 1996-ம் ஆண்டு 13 நாட்கள் பிரதமராகவும், 1998-99 ஆம் ஆண்டில் 13 மாதங்கள் பிரதமராகவும் பதவி வகித்தார். அதன் பின் 1999 முதல் 2004 வரை முழுமையாக 5 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார்.
முன்னாள் பிரதமரான வாஜ்பாய் கடந்த 2018 ஆகஸ்ட் 16-ம் தேதி வயது முதிர்வின் காரணமாக தனது 93-வது வயதில் மரணமடைந்தார். அடல் பிஹாரி வாஜ்பாயின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து, டெல்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பல தலைவர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.







