2018ம் ஆண்டு பிரேசில் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளேசி கொரைய்யா அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்பட்ட பாதிப்பால் தனது 27 வயதிலேயே உயிரிழந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிளேசி கொரைய்யா, மிஸ் பிரேசில் பட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு வென்றார். அந்த புகழை வைத்து சிறந்த மாடலாக வலம் வந்த கிளேசி, அதோடு ஓய்ந்து விடாமல் சிறந்த தொழிலதிபராகவும் உருவெடுத்தார். மேலும் சமூக ஊடகங்களிலும் சுறுசுறுப்பாக இருந்த கிளேசி, வறுமையை வென்று தான் வாழ்க்கையில் முன்னேறியது எப்படி என்பது குறித்து சமூக வலை தளங்களில் அவ்வப்போது பதிவிட்டு பிறருக்கு நம்பிக்கையூட்டும் வேலையையும் செய்தார். இதன் மூலம் இன்ஸ்ட்ராகிராமில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவரை பின் தொடர்ந்தனர்.
இந்நிலையில் தொண்டையில் வளர்ந்த சதையின் மூலம் கிளேசி கொரைய்யாவிற்கு சோதனை ஏற்பட்டது. இந்த அவதியிலிருந்து விடுதலை பெற கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில் அவரது உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கடந்த ஏப்ரல் 4ந்தேதி இதய செயலிழப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற கிளேசி கொரைய்யா கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அதிருலிருந்து மீளாமல் இருந்தார். இந்நிலையில் கோமா நிலையிலேயே தற்போது அவர் உயிர் பிரிந்துள்ளது. 27 வயதிலேயே முன்னாள் பிரேசில் அழகி கிளேசி கொரைய்யா உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







