முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது: இபிஎஸ் கண்டனம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வந்த திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வந்த திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்.19ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் அன்றைய தினம் சென்னை ராயபுரம் 49 வார்டில் வாக்களிக்க வந்த திமுக பிரமுகரை அதிமுகவினர் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இது தொடரப்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவின. இதில், திமுக பிரமுகரை சட்டையை கழட்டுமாறு ஜெயக்குமார் வற்புறுத்துவது தெளிவாக தெரிகிறது. ஆனோல் தாக்குதலுக்கு உள்ளான நபர், திமுக சார்பாக கள்ள ஓட்டு போட வந்தவர் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜெயக்குமார் முன்னிலையில் சிலர் திமுக பிரமுகரை தாக்கும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரை அதிமுகவினர் சட்டையைக் கழற்றி அழைத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து திமுக பிரமுகர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது ஜெயக்குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த கழக அமைப்பு செயலாளர் D.ஜெயக்குமாரை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது.” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.