இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான வீரபத்ர சிங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
1983 முதல் 2017 வரை ஆறு முறை இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக பதவி வகித்த வீரபத்திர சிங் கடந்த திங்கட்கிழை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 87. இதை மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவர் ஒன்பது முறை எம்.எல்.ஏவாகவும், ஐந்து முறை எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதிலிருந்து வீரபத்ர சிங்கின் உடல் நிலையில் தோய்வு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இவர் 1998 முதல் 2003 வரை இமாச்சல சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அதே போல சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து, தொழில்துறை மாநில அமைச்சர், மத்திய எஃகு அமைச்சர் மற்றும் மத்திய, சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் அமைச்சராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார்.
அதேபோல 1977 முதல் 2012 வரை நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







