ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து சந்திரபாபு நாயுடு, ராஜ முந்திரி சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.
ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். நேற்று காலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விடிய விடிய நடைபெற்ற விசாரணை இன்று அதிகாலை 3.15 மணி வரை நீடித்தது. பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு, நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து சந்திரபாபு நாயுடு, ராஜ முந்திரி சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.
சந்திர பாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட உள்ளதால் ஆந்திரா முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.