தமிழ்நாட்டின் வருவாய் வளர்ச்சியை மேம்படுத்த ‘வருவாய் பெருக்கக் குழு’ அமைப்பு!

மாநிலத்தின் வருவாய் வளர்ச்சியை மேம்படுத்த தமிழ் நாடு அரசு ‘வருவாய் பெருக்கக் குழு’ அமைத்துள்ளது.

தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

பொருளாதார வளர்ச்சியுடன் வருவாய் வளர்ச்சியையும் ஒருங்கிணைப்பதும், வள ஆதாரங்களை வலுப்படுத்தி நிலைநிறுத்துவதும் அவசியமாகிறது. மாநிலத்தின் நிதிசார் சுயசார்பை வலுப்படுத்தவும், அதன் வளர்ச்சி சார்ந்த கடமைகளை நிறைவேற்றத் தேவையான நிதிச் சூழலை உருவாக்கவும், வரி மற்றும் வரி அல்லாத வருவாய்களை நிலையான முறையில் அதிகரிக்க நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதற்காக, வரி விதிப்பு மற்றும் வசூல் நடைமுறைகளைச் சீரமைத்தல், வருவாய் இழப்புகளைத் தடுத்தல், வரி விகிதங்கள்-கட்டணங்கள்-விலக்குகள் ஆகியவற்றை முறைப்படுத்துதல் மற்றும் புதிய அல்லது முழுமையாகப் பயன்படுத்தப்படாத வருவாய் ஆதாரங்களைக் கண்டறிதல் போன்ற பரிந்துரைகளை வழங்க, ‘வருவாய் பெருக்கக் குழு’ (Revenue Augmentation Committee) ஒன்றை அரசு இதன் மூலம் அமைக்கிறது.

வருவாய் பெருக்கக் குழுவின் அமைப்பு:

இக்குழுவின் தலைவராக மாண்டெக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார நிபுணரான இவர் மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர்; பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.

உறுப்பினர்கள்

  • டாக்டர் கே.பி. கிருஷ்ணன், தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலில் (NCAER) பொருளாதாரத் துறைக்கான ‘சேர்’ (Chair) பேராசிரியர்; புது தில்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தில் (CPR) கௌரவப் பேராசிரியர்
  • அர்பிந்த் மோடி, வரி கொள்கை நிபுணர்; வருமான வரிச் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கான பணிக்குழுவின் (2017-18) ஒருங்கிணைப்பாளர்; சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதி விவகாரத் துறையில் பொருளாதார நிபுணர்.
  • நஜீப் ஷா, I.R.S. (ஓய்வு), மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் (CBEC) முன்னாள் தலைவர்; நவா ஷேவா துறைமுகத்தின் சுங்கத் துறை ஆணையர்; கூடுதல் தலைமை இயக்குநர் (வரி ஏய்ப்புத் தடுப்புப் பிரிவு, மும்பை); இந்திய அரசின் நிதி அமைச்சகத்தில் இணைச் செயலாளர் (வரித் திரும்பப் பெறுதல்/Drawback பிரிவு)
  • எம்.ஏ. சித்திக், I.A.S., கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித் துறை, தமிழ்நாடு அரசு
  • டாக்டர் எம். சுரேஷ் பாபு, இயக்குநர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS), சென்னை.

குழுவின் வரம்புகள் பின்வருமாறு:

i. மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், வருவாய் நெகிழ்ச்சித் தன்மை (revenue buoyancy), செயல்திறன் மற்றும் சுயசார்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் அரசுக்கு ஆலோசனை வழங்குதல்.

ii. புதிய மற்றும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத வருவாய் ஆதாரங்களைக் கண்டறிதல்; பொதுத்துறை நிறுவனங்களின் ஈவுத்தொகை (dividends), நிலம் மற்றும் சொத்துக்களைப் பணமாக்குதல் (monetisation) மற்றும் மேம்படுத்தப்பட்ட பயனர் கட்டணங்கள் உள்ளிட்ட வரி அல்லாத வருவாய் வழிகளை ஆய்வு செய்தல்.

iii. வருவாய் ஈட்டும் துறைகளில் வருவாய் பாதுகாப்பு மற்றும் முறையான கசிவுகள் (systemic leakages), வரி ஏய்ப்பு மற்றும் நிர்வாகத் திறமையின்மை ஆகியவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல் (நிர்வாகத்தில் முறையான மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு உட்பட).

iv. மதுபானம் மீதான ஒழுங்குமுறை மற்றும் வரிவிதிப்புக் கொள்கையில் மாற்றங்கள் செய்வதன் மூலம், மனித நுகர்வுக்கான மதுபானம் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளைப் பரிந்துரைத்தல்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.