நாமக்கல் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டியில் சரவணன் என்பவர் சுமார் 2.600 கிலோ கிராம் பிரியாணியை சாப்பிட்டு முதல் பரிசான ரூ.5001 ரொக்கப் பணத்தை தட்டிச்சென்றார்.
நாமக்கல் நகரில் மோகனூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான அசைவ உணவகம்
செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் பிரியாணி சாப்பிடும் போட்டி இன்று நடைபெற்றது. 20 நிமிட நேரத்தில் யார் அதிகம் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு ரூ.5,001 பரிசு தொகை வழங்கப்படும் என நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்து. போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு ரூ.99 நுழைவு கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த சுவரொட்டிகளை பார்த்து போட்டியில் கலந்து கொள்ள சுமார் 100க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் பதிவு செய்த முதல் 35 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டது. அசைவ பிரியர்கள் 35 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டு சுட சுட பரிமாறிய சிக்கன் பிரியாணியை போட்டி போட்டுக் கொண்டு ருசித்து ஒரு பிடி பிடித்தனர். இந்த போட்டியில் இளம் பெண் ஒருவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.
போட்டியாளர்களுக்கு, ஒரு கப் அளவு கொண்ட பிரியாணியில் சிக்கன் பீஸ், 2 அவித்த
முட்டைகள் என முக்கால் கிலோ எடை கொண்ட பிரியாணி வழங்கப்பட்டது. ஒரு கப் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்தடுத்து வழங்கப்பட்ட கப்பிலும் இதே அளவுவழங்கப்பட்டது. இறுதியாக நாமக்கல்லை சேர்ந்த சரவணன் என்பவர் நிர்ணயிக்கப்பட்ட 20 நிமிடங்களில் 2.600 கிலோ கிராம் பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு உணவக உரிமையாளர்கள் ரூ.5,001 பரிசு தொகையாக வழங்கியதுடன்
சாப்பிட்டதற்கான பில் தொகையையும் வாங்கவில்லை.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசாக கிஃப்ட் வவுச்சர் வழங்கப்பட்டது. இவரிகளிடமும் சாப்பிட்டதற்கான தொகை வசூல் செய்யப்படவில்லை.
உணவகம் ஆரம்பித்து ஒரு வருடம் முடிய உள்ளதாலும், சிக்கன் பிரியாணியை விரும்பி
சாப்பிடுவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டதாக உணவக
உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
பிரியாணி சாப்பிடும் போட்டியை பார்த்த போது வெண்ணிலா கபடி குழு படத்தில்
நடிகர் சூரி பரோட்டா சாப்பிட்ட காட்சிகள் தான் நினைவுக்கு வருவதாக அங்குள்ள
பார்வையாளர்கள் பேசிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.







