இந்தியாவின் விதிகளை பின்பற்றும்படி கூகுள், முகநூல் சமூக வலைதள நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற குழு அறிவுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற குழுவின் முன்பு முகநூல் இந்தியா, கூகுள் இந்தியா நிறுவனங்களின் நிர்வாகிகள் இன்று ஆஜராகினர். முகநூல் சார்பில் அதன் பொது கொள்கை இயக்குநர் சிவானந்த் துக்ரால், அசோசியேட் ஜெனரல் கவுன்சல் நம்ரதா சிங் ஆகியோர் ஆஜராகினர். கூகுள் இந்தியா சார்பில் அரசு உறவுகள் மற்றும் பொது கொள்கைக்கான இந்திய தலைவர் அமான் ஜெயின் , சட்ட துறை இயக்குநர் கீதாஞ்சலி துகால் ஆகியோர் ஆஜராகினர்.
மக்களின் உரிமைகள்பாதுகாப்பு மற்றும் சமூக அல்லது வலை தள செய்தி ஊடகதளங்களை தவறாகப் பயன்படுத்துதலை தடுத்தல் ஆகிய விஷயங்களின் கீழ் சமூக வலைதளங்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற குழு முன்பு விளக்கம் அளித்தனர். அப்போது நாடாளுமன்ற குழுவின் தரப்பில், இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மதித்து நடக்க வேண்டும். அது தவிர அரசின் உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டும்.
அதே போல நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும், என்று கூறப்பட்டது. சமூக வலைதள நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புக் கொள்கைகளில் பல்வேறு ஓட்டைகள் இருப்பதாகவும் நாடாளுமன்ற குழுவினர் சுட்டிக்காட்டினர். இந்த நிலையில் யூடியூப் மற்றும் இதர சமூக வலைதளங்களின் நிர்வாகிகளும் நாடாளுமன்ற குழுவின் முன்பு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட உள்ளது.







