மதுரை பாலமேடு பகுதியில் வனவிலங்குகளுக்காக மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மதுரை வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வரை ரூ.555 கோடி மதிப்பில் 744 (A) என்ற புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க கடந்த 2018ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் தற்போது 80 சதவித நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலமேடு அருகே வகுத்தமலை வனப்பகுதியில் செல்லும் வகையில் இந்த சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. வகுத்தமலை பகுதியில் உள்ள அரிய வகை விலங்கினங்களை காக்கும் வகையில் 210 மீட்டருக்கு இரண்டு மலைகளை இணைக்கும் வகையில் வனவிலங்கு மேம்பாலம் (Wildlife Bridge) அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக மதுரை மாவட்ட வனத் துறைக்கு அனுமதி கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறை விண்ணப்பித்திருந்தது. இந்த பணிகளுக்கு தமிழக வனத்துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து, இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 2023க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்திலேயே முதல்முறையாக வனவிலங்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.








