அக்டோபர் 16ம் தேதி முதல் சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக சேலம் எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமான சேவை அக்டோபர் 16-ந் தேதி தொடங்கப்பட உள்ளதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் தெரிவித்ததாவது..
” உதான் -5 திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்தில் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அக்டோபர் 16-ம் தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர் – சேலம் -கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட உள்ளது.
இந்த விமான சேவை கொச்சின் – சேலம் -பெங்களூர் வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படும். வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும்.
அக்டோபர் மாத இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் அக்டோபர் 29ஆம் பெங்களூர் – சேலம் – ஹைதராபாத் வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது. மீண்டும் ஹைதராபாத் – சேலம் – பெங்களூர் வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும். வாரத்தின் ஏழு நாட்களிலும் சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை அளிக்க இண்டிகோ நிறுவனம் முன் வந்துள்ளது.
மேலும் சேலம் சென்னை விமான சேவையும் 29ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை தொடங்குவதால் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள்,வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் “ சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.







