கோடிகளை கொட்டி கோடிகளை அள்ளும் பிசினஸ் என்றாலும் எந்த கறார் கணக்குக்குள்ளும் சிக்காத, சுகமான ரசனை சினிமா. நாம் ஒன்று நினைத்தால், அது ஒன்றை நினைக்கும். அப்படித்தான் நடந்தது இந்தப் படத்துக்கும்.
தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படங்களை பட்டியலிட்டால், இந்தப் படத்துக்கும்
இருக்கிறது, ஓர் இடம். திகட்ட திகட்ட காதலையும் ரசிக்க ரசிக்க இசையையும் கலந்து சொன்ன அந்தப் படம், ’நிறம் மாறாத பூக்கள்’. கவித்துவ டைட்டில்.
பாரதிராஜா இயக்கத்தில், சுதாகர், ராதிகா, விஜயன், ரதி (அக்னிஹோத்ரி) நடித்த
இந்தப் படத்தின் கதையை கே. பாக்யராஜ் எழுதியிருந்தார். வசனம் பஞ்சு அருணாச்சலம்.
படித்துவிட்டு வேலைக்கு அலையும், வறுமை சுதாகர், மாடி வீட்டு ராதிகா, ஊட்டியில் காதல் தோல்வியால் குடித்துக்கொண்டே இருக்கும் விஜயன், அவரின் குடி-க்குப் பின் இருக்கும் காதல், அநியாயமாக உயிர்விடும் காதலி ரதி.. இவர்களோடு டேப் ரெக்கார்டரில், ’ஆயிரம் மலர்களே மலருங்கள்..’என ஒலிக்கும் இளையராஜாவின் இசை. இதுதான் படம்.
’கிழக்கே போகும் ரயிலின்’ பரஞ்சோதியையும் பாஞ்சாலியையும் சுதாகர், ராதிகா என்ற சொந்த பெயரிலேயே இதில் நடிக்க வைத்திருப்பார் பாரதிராஜா.
ஆனால், இதில் முதலில் நடிக்க இருந்தது கமல், ரஜினி, ஸ்ரீதேவி! சுதாகர் நடித்த கேரக்டரில் கமலும் விஜயன் கேரக்டரில் ரஜினியும் ரதி கேரக்டரில் ஸ்ரீதேவியும் ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தார்கள். படத்துக்குப் பிரமாண்ட பட்ஜெட் போட்டிருந்தார்கள். ஆனால், இந்தப் படத்தைத் தயாரிக்க இருந்த தயாரிப்பாளர் திடீரென இறந்துவிட, மொத்த திட்டமும் டொப்!
பிறகு குறைந்த பட்ஜெட்டில் இவர்களை வைத்து இயக்கி இருக்கிறார் பாரதிராஜா. இதில் விஜயனை நடிக்க வைக்க ஏகப்பட்ட எதிர்ப்பாம். இந்தப் படத்தில் விஜயனுக்கு டப்பிங் பேச வந்தவர்தான் ’நிழல்கள்’ ரவி. ஆனால், அவர் குரலை விட்டுவிட்டு பாரதிராஜாவே, விஜயனுக்காக டப்பிங் பேசினார், இந்தப் படத்தில்.
இதற்குப் பிறகு அவர் இயக்கிய ’நிழல்கள்’ படத்தில் ரவியை நடிகராக்கிய பாரதிராஜா, கூடவே ராஜசேகர், வைரமுத்து, ரோகிணி (ராது) உட்பட பலரை அறிமுகப்படுத்தினார் என்பது தெரிந்ததுதானே!
-ஏக்ஜி










