மயிலாடுதுறை அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகக் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு மீனவ குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவர் மீனவ குடும்பத்தை சார்ந்தவர். இவரின் குடும்பத்தினரை கடந்த 2018 ஆம் ஆண்டு ஊர் பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வினோத் பலமுறை புகார் அளித்து வந்துள்ளார். இந் நிலையில் புகாரின்பேரில் மாவட்ட நிர்வாகம் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்துள்ளது. மேலும் ஊராட்சி மன்ற தலைவருக்கு இச் சம்பவம் குறித்து உரிய தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு விட்டிருந்தார்.
இந்நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வினோத் தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மீனவ குடும்பத்தினரிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து மீனவ குடும்பத்தினர் கலைந்து சென்றனர்.
—கோ.சிவசங்கரன்







