முக்கியச் செய்திகள் தமிழகம்

கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால், கடல்சார் மீன்வள மசோதாவை முன்மொழிய வேண்டாமென்று என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரின்போது ஒன்றிய அரசு நிறைவேற்ற உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021, “இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால், அதனை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டாமென்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது என்றும், இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின் மாநிலப் பட்டியலின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறும் சில உட்பிரிவுகளைக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள மசோதாவில் உள்ள சில பிரிவுகளில், மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல் (Criminalisation), சிறையில் அடைத்தல், மீனவர்களுக்கு எதிராக வலிய நடவடிக்கைகளை எடுத்தல் (Use of force), கட்டணங்களை விதிப்பது, பெரும் அபராதங்களை விதிப்பது போன்ற மீனவர்களுக்கு எதிரான உட்பிரிவுகள் இருப்பதால், இது பரவலாக எதிர்ப்புக்களையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்று பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்துத் தரப்பு மக்களுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகள் நடத்தியபிறகு, அவர்களின் கருத்துகளைப் பெற்று, மீனவர் நலன் காக்கும் வகையிலும், கடல் வளத்தைக் காக்கும் வகையிலும், புதியதொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் பின்னர் தாக்கல் செய்யலாம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு கல்லூரிகள் திறப்பு; தமிழிசை சௌந்தரராஜன்

Saravana Kumar

காங்கிரஸ் வேட்பாளரின் மகள் தீவிர வாக்கு சேகரிப்பு!

Gayathri Venkatesan

தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த சபாநாயகர்கள்!

Vandhana