தேர்தலில் திமுக உட்பட கட்சிகள் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தனித்து போட்டியிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”ஈரோடு இடைத் தேர்தலில் திமுக ஏன் தனித்து போட்டியிட வில்லை என்பது எனக்கு மிகப் பெரிய கேள்வியாக எழுகிறது. 1962ல் துவங்கி இன்று வரை ஐந்து முறை ஆட்சி செய்து ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திமுக இன்றும் குதிரை சவாரி செய்கிறார்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை. அதைப் பற்றி ஊடகங்கள் கேள்வி கேட்பதில்லை.
அவர்கள் தனித்து போட்டியிடட்டும் , வருகின்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக உட்பட கட்சிகள் தனித்து போட்டியிடட்டும். முதலில் அவர்கள் தனித்து களம் இறங்கினால் பாஜகவும் தனித்து போட்டியிடும் .
இரட்டை இலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அவர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும். தமிழகத்தில் யாரும் பிரிந்து செல்ல வேண்டும் என்று எந்த கட்சியும் நினைக்க மாட்டார்கள். ஊரு இரண்டு பட்டால் பாஜக சந்தோஷப்படாது.
திமுகவில் இருந்து அதிமுக பிரிந்த போது எத்தனை பேர் சந்தோஷப்பட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அதன் பின் விளைவுகள் என்ன என்பது இப்போதும் தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர்.
ஈரோடு இடை தேர்தல் சம்பந்தமாக பாஜகவின் நிலைப்பாடு ஏழாம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பார். கூட்டணியா ? தனித்தா என்ற உங்களின் கேள்விக்கு உங்கள் விருப்பம் போல் எல்லாம் நடக்கும்” என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
– யாழன்