இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான செளரவ் கங்குலி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 1992ல் தொடங்கிய தனது கிரிக்கெட் பயணம் தற்போது 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் தனக்கு எவ்வளவோ கொடுத்துள்ளது என தெரிவித்துள்ள அவர், குறிப்பாக, மக்களின் ஆதரவு கிரிக்கெட் மூலமே தனக்கு கிடைத்தது என கூறியுள்ளார்.
தனது கிரிக்கெட் பயணத்தில் தன்னோடு அங்கம் வகித்தவர்கள், ஆதரவு அளித்தவர்கள், உதவியவர்கள் என ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தில் தான் நன்றி தெரிவிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள செளரவ் கங்குலி, மக்கள் பலருக்கும் ஏதாவது ஒருவகையில் உதவ வேண்டும் என்று திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது வாழ்க்கையில் தான் தொடங்க உள்ள இந்த புதிய அத்தியாயத்திற்கும் மக்களின் ஆதரவு தொடரும் என நம்புவதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார்.
அவரது திட்டம் என்ன என்பது குறித்து அவர் தெரிவிக்காததால், பலரும் பலவிதமாக ஊகித்து வருகிறார்கள்.
பிசிசிஐ தலைவராக இருந்து வரும் செளரவ் கங்குலி அந்த பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக செய்திகள் வந்த நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சமீபத்தில் கொல்கத்தா சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, செளரவ் கங்குலியின் வீட்டிற்குச் சென்று அவருடன் கலந்துரையாடினார்.
எனவே, பாஜகவில் இணையப்போகிறாரா கங்குலி என்ற கேள்வியும் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.
பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள கங்குலி, விரைவில் இதற்கான விளக்கத்தை அளிப்பார் என பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.









