திருச்சியில் இருந்து ராஜஸ்தான் சென்ற ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகருக்கு ஹம்சஃபர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (22.09.2023) அதிகாலை 4.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட ரயில் 2-ம் நாளான இன்று (23.09.2023) குஜராத் மாநிலம் சூரத் அருகே வல்சத் பகுதியில் சென்றபோது ரயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சூரத்தில் இருந்து 20-25 கிமீ தொலைவில் விபத்து நிகழ்ந்துள்ளது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தீ விபத்து ஏற்பட்ட பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்
விபத்தில் பி1 பெட்டி முற்றிலும் எரிந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகள், தீயணைப்புப் படையினர் ஆகியோர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.







