இருமாநில எல்லையில் நடைபெற்ற மோதல்களில் 6 போலீசார் உயிரிழந்ததை அடுத்து அசாம் மாநில பாஜக முதலமைச்சர் மீது மிசோரம் காவல்துறை கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது.
மிசோரம் மாநிலத்தின் எல்லையோர மாவட்டமான கோலாசிப் மாவட்டத்தில் உள்ள வைரெங்தே எனும் நகரின் அருகே, இரு மாநில காவல்துறை இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. மாநில எல்லை பிரச்னை தொடர்பாக கடந்த திங்களன்று அசாம் மற்றும் மிசோரம் காவல்துறையினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் அசாம் காவல்துறையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மூத்த காவல் அதிகாரிகள் 4 பேருக்கு எதிராக மிசோரம் காவல்துறை குற்றவியல் வழக்குகள் பதிவு செய்துள்ளது. அசாமில் பாரதிய ஜனதா கட்சியும், மிசோரமில் அதன் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








