ஜவுளித்துறையில் நிதி நெருக்கடி: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஜவுளித் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத்…

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

ஜவுளித் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை போக்கிடும் வகையில் சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மேற்கில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல காரணிகளால் ஜவுளி ஏற்றுமதித் துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்றும், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மாதந்தோறும் வளர்ச்சி விகிதம் இப்போது கூர்மையான சரிவைக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/CMOTamilnadu/status/1582740357481385984

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சந்தைகளை பூர்த்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை ஏற்றுமதி தொகுப்புகளில் ஒன்றான திருப்பூர் அலகில் 95 சதவிகித குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன என்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கோடைக் காலத்திற்கான கொள்முதல் ஆணைகள் தற்போது சுமார் 40 சதவிகித குறைந்துள்ளதாகவும், குறைந்த தேவை காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் ஏற்றுமதி பிரிவுகளும் அவற்றின் குறு சிறு நிறுவன விநியோகஸ்தர்களும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன. இதனால் கிராமப்புறப் பெண்களின் வேலைவாய்ப்பு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வர ஜவுளித் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) உடனடியாக அறிவிக்குமாறும், புதிய திட்டத்தின் கீழ் 20 சதவீதம் கூடுதல் பிணையமற்ற கடன் வழங்கப்படலாம் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.