இந்த ஆண்டு இறுதியுடன் இஸ்ரேலுக்கான நிதியுதவி நிறுத்தம்! – டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கும் 4 பில்லியன் டாலர் நிதியுதவியை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நெதன்யாகுவுடன் ஒப்பந்தம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அளித்த பேட்டியில் இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதியுதவி குறித்து பேசினார். அப்போது, “இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 4 பில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பே இந்த நிதியுதவியை நிறுத்துவது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒப்பந்தம் செய்துவிட்டோம். இந்த ஆண்டு இறுதிக்குள் இஸ்ரேலுக்கு நிதி வழங்குவது நிறுத்தப்படும். இருப்பினும், இஸ்ரேலுக்கு உதவி தேவைப்பட்டால் அமெரிக்கா உதவும்” என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும், நிதியுதவியை நிறுத்தும் யோசனையை நெதன்யாகுவே முன்வைத்ததாகவும், அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு குறித்து எழும் விமர்சனங்களை அவர் புரிந்துகொண்டிருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

தேர்தல் அரசியல் காரணமா?

அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு தொடர்பாக ஜனநாயகக் கட்சியின் முற்போக்கு தலைவர்கள் மற்றும் டிரம்பின் சொந்த MAGA(Make Great America Again) இயக்கத்தைச் சேர்ந்த சிலரும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, மிச்சிகன் மாகாண செனட் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் எல்-சயீத், இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், இஸ்ரேலுக்கு நிதியுதவி வழங்குவதால் அமெரிக்கா தேவையற்ற விமர்சனங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு கொள்கைக்கு எதிரான விமர்சனங்களைத் தேர்தல் அரசியலில் எதிர்கொள்ளும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம்!

இதற்கிடையில், இஸ்ரேலுக்கான நிதியுதவியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக நிறுத்திவிட முடியாது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை நிறுத்துவதற்கு சட்டரீதியான நடைமுறைகள் அவசியம். எனவே, டிரம்பின் அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அட்லாண்டிக் கவுன்சிலின் எதிர்கால உள்நாட்டுப் பாதுகாப்புத் திட்ட இயக்குநர் தாமஸ் வாரிக் கூறுகையில், 2026-ம் ஆண்டு இறுதிக்குள் இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவி முழுமையாக நிறுத்தப்பட வாய்ப்பில்லை என்றார். ஏவுகணைப் பாதுகாப்பு மற்றும் ஆளில்லா விமான எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு ஆயுதத் திட்டங்கள் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதால், இந்த நிதியுதவியை ஒரே நேரத்தில் நிறுத்துவது எளிதானதல்ல என்றும், 2027-ம் ஆண்டு காலப்பகுதியில் படிப்படியாக நிறுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் மசோதா!

மறுபுறம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. 2027-ம் நிதியாண்டுக்கான தேசிய பாதுகாப்பு அங்கீகார மசோதாவில் (NDAA) பிரிவு 219-ஆக இடம்பெற்றுள்ள அமெரிக்கா – இஸ்ரேல் பாதுகாப்புத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு முன்முயற்சி, ஆயுத ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் தொழில்நுட்பப் பகிர்வு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும், அமெரிக்காவின் இறையாண்மை மற்றும் ராணுவத் தொழில்நுட்பப் பாதுகாப்பு தொடர்பாக சில தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க மக்களின் மனநிலை!

2023-ம் ஆண்டு காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க மக்களிடையே இஸ்ரேலுக்கு ஆதரவான மனநிலை குறைந்து வருவதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் குயின்னிபியாக் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக்கணிப்பில், அமெரிக்க வாக்காளர்களில் 48 சதவீதம் பேரும், ஜனநாயகக் கட்சியினரில் 66 சதவீதம் பேரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவு அதிகமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். 2017-ம் ஆண்டு இதே கேள்வி கேட்கப்பட்டபோது முறையே 16 சதவீதம் மற்றும் 20 சதவீதம் பேர் மட்டுமே இவ்வாறு தெரிவித்திருந்தனர். மேலும், கடந்த ஜூலை மாதம் இஸ்ரேலுக்கான நிதியுதவியை நிறுத்தக் கோரும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தோல்வியடைந்தது. அந்தத் தீர்மானத்திற்கு எதிராக 314 உறுப்பினர்களும், ஆதரவாக 104 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்களும் நிதியுதவியை நிறுத்த ஆதரவு தெரிவித்திருந்தனர்.

தேர்தல் முடிவுகளை மாற்றாது – மார்ஜரி டெய்லர் கிரீன்!

டிரம்பின் அறிவிப்பு குறித்து முன்னாள் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜரி டெய்லர் கிரீன் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், “இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்த நெதன்யாகுவிடம் டிரம்ப் அனுமதி பெற்றிருப்பது, இன்றைய தேர்தல் முடிவுகளை மாற்றப்போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் அரசியல் முடிவுகள் வெளியாகிவரும் சூழலில் இஸ்ரேலுக்கான நிதியுதவி விவகாரம் மீண்டும் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.