அனல் பறக்கும் பிளே ஆஃப் – குஜராத் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 172 ரன்கள் குவித்துள்ளது.  ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன்…

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 172 ரன்கள் குவித்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதன்படி முதல் குவாலிஃபயர் போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டு வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டெவன் கான்வே நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

முதலாவது பார்ட்னர்ஷிப்புக்கு 87 ரன்கள் குவித்தது ருதுராஜ்-கான்வே கோடி. 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய ஷிவம் துபேவும் 1 ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து களமிறங்கிய ரஹானே 17 ரன்களில் வெளியேற, 34 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த கான்வேவும் ஆட்டமிழந்தார்.

ராயுடு 17 ரன்களும், ஜடேஜா 22 ரன்களும், கேப்டன் எம்.எஸ்.தோனி 1 ரன்னிலும் வெளியேற சென்னை அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.