மதுரை அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
மதுரை அழகர் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று காலை கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியது.
இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இதைதொடர்ந்து 5-ந் தேதி காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் சகல பரிவாரங்களுடன் சாமி புறப்பாடு நடைபெறும். 6-ந் தேதி மாலையில் அனுமார் வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். 7-ந் தேதி மாலையில் கருட வாகனத்தில் புறப்பாடு, 8-ந் தேதி காலையில் கள்ளழகர் பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருள்கிறார்.
மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி காட்சி தருகிறார். 9-ந் தேதி மாலையில் யானை வாகனத்திலும், 10-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரத்திலும் சுவாமி காட்சி தருகிறார். 11-ந் தேதி மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் பெருமாள் காட்சி தருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார்.
இதைதொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடைபெறும். இரவு பூப்பல்லக்கு விழா மற்றும் 13-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 14-ந் தேதி உற்சவ சாந்தியுடன் ஆடிதிருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
ஆன்மிக செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், தமிழ்நாட்டு கோவில்களில் நடைபெறும் தெய்வ வழிபாடுகளையும் நமது நியூஸ் 7 தமிழ் பக்தி யூட்யூப் சேனலை பின்தொடர்ந்து ஆன்மிக அன்பர்கள் பார்த்து மகிழுங்கள்.
– இரா.நம்பிராஜன்








