பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸூக்கு ஜாமின் வழங்கி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2021ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கவனித்தார். நிகழ்ச்சி முடிந்து ராஜேஷ் தாஸ் காரில் சென்ற போது, பெண் எஸ்பி ஒருவரை காரில் ஏற்றிக் கொண்டார். அப்போது ராஜேஸ் தாஸ் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்ணன் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். புகார் அளிக்கச் சென்ற பெண் எஸ்பியின் காரை மறித்து சாவியை பறித்த செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த நிலையில் ராஜேஸ் தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தனர்.
பின்னர் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு ஜாமின் வழங்கி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 30 நாட்களுக்குள் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.







