மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் மின் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்கள், தங்கள் வீட்டில் மழை மற்றும் வேறு சில காரணங்களால் மின் மீட்டர்கள் பழுதடைந்து உள்ளதாகவும் இதனால் தங்களுக்கு அதிக அளவில் மின்சார கட்டணம் காண்பிக்கப்படுவதாகவும் தொடர் புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து மின்வாரியத்துறையினர் சமீப காலமாக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தினர். இதில், தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களாக கருதப்படும் சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000-க்கும் அதிகமான மீட்டர்கள் பழுது ஆகியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும். சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் 10,000-க்கும் அதிகமான மீட்டர்கள் பழுதடைந்து உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







