கோவையில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறச் சென்ற காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண்ணின் தந்தை உட்பட இருவரை போலீசார் கைது செய்த நிலையில், மனம் உடைந்த காதலி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் பிரசாந்த்
(21). இவர் தனியார் நிறுவனத்தில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். பிரசாந்த்
செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த தன்யா (19) என்ற இளம் பெண்ணை
கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆரம்பத்தில் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு அடுத்த ஆண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தன்யாவின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு நள்ளிரவில் வாழ்த்து கூற பிரசாந்த் தனது நண்பர்களான தரணி பிரசாத், குணசேகரன் மற்றும் அபிஷேக் ஆகிய மூவருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் தன்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
12 மணியளவில் தன்யாவின் வீட்டுக் கதவை பிரசாந்த் தட்டிய போது அவரது உறவினரும் டாக்ஸி ஓட்டுனருமான விக்னேஷ் (29) மற்றும் தன்யாவின் தந்தை மகாதேவன் (40) கதவை திறந்துள்ளார். அப்போது பிரசாந்த் குடிபோதையில் இருந்ததால் விக்னேஷுக்கும் பிரசாந்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில் பிரசாந்த் விக்னேஷை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் அங்கிருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தியுள்ளார். இதனால் சரிந்து விழுந்த பிரசாந்தை அவரது
நண்பர்கள் இரு சக்கர வாகனத்திலேயே அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் தீர்ந்ததால்,
ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து அங்கு வந்த 108 ஆம்புலென்ஸ்
மூலம் பிரசாந்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை
பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக
தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தன்யாவின் உறவினரான கால் டாக்ஸி டிரைவர் விக்னேஷ் (29), மற்றும் அவரது தந்தை மகாதேவன் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பிறந்தநாள் வாழ்த்துக் கூற சென்ற காதலனை காதலி கண் முன்னே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காதலனை வெட்டி கொலை செய்ததால் மனம் உடைந்த காதலி தன்யா தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் தன்யா உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.