சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கை சென்னைக்கு மாற்றக்கோரி தந்தை காமராஜ் மனு..!

சின்னத்துரை நடிகை சித்ராவின் வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சித்ராவின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம்…

சின்னத்துரை நடிகை சித்ராவின் வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சித்ராவின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர்
மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக
மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர்
மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யபட்ட  அவரது கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சின்னத்திரை நடிகை  சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என  சித்ராவின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் தொடர்ந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துவருவதாகவும், 2021ம் ஆண்டிலிருந்தே வழக்கின் விசாரணை குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் கட்டத்திலேயே இருப்பதாகவும் மனுவில்
கூறப்பட்டுள்ளது.

வயது முதுமை காரணமாக தன்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதாகவும், மேலும் வழக்கில் சாட்சிகளாக உள்ள நபர்களும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலேயே இருப்பதால், வழக்கை திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

அவ்வாறு மாற்றப்பட்ட பின்னர் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.