மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது!

திருவெறும்பூர் அருகே 12வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீசார் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் வேலு (34). இவர் வெல்டிங் ஒர்க் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேலுவின் மனைவி இளைய மகளை அழைத்து சென்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் வேலுவிடம் 12 வயதான மூத்த மகள் வளர்ந்து வந்தார். அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான வேலு அடிக்கடி தனது மகளை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தந்தையின் மிரட்டலுக்கு பயந்து சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி வேலு தனது மகளை அழைத்துக் கொண்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்திலேயே மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை பார்த்த சக பயணிகள் வேலுவை அடித்து நடுவழியில் இறக்கி விட்டுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை உறவினிடம் ஒப்படைக்க முயற்சி செய்தபோது சேலத்தில் உள்ள முகவரி சிறுமிக்கு தெரியாததால் அங்குள்ள கிறிஸ்தவ சபையின் காப்பத்தில் ஒப்படைத்துச் சென்றனர். இதையடுத்து காப்பகத்தின் நிர்வாகியான கிறிஸ்தவ சபையின் பாஸ்டர் சிறுமியிடம் விசாரித்தபோது கொடூர தந்தையின் வெறிச்செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் கிறிஸ்தவ சபையின் பாஸ்டர் சிறுமியை அழைத்துக் கொண்டு துவாக்குடி பகுதிக்கு வந்து நடந்ததை கூறிஉள்ளார். இதையடுத்து அங்கிருந்த உறவினர்கள் வேலுவை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதை தொடர்ந்து சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.