டெல்லிக்குள் பேரணி நடத்துவது தொடர்பாக போலீசார் தான் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு நாடு முழுவதும் ஆதரவு குரல்களும் அதிகரித்து வருகின்றன. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்பு டிராக்டர் பேரணியிலும் ஈடுபட்டனர். ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளும் இந்த போராட்டத்தில் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, 5,000 பேருக்கு மேல் பேரணியாக செல்வது சட்டவிரோதமான ஒன்று என மத்திய அரசு தெரிவித்தது. பின்னர், யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்ககூடாது என்பது சட்டம் ஒழுங்கு விவகாரம் என்றும், அதை போலீசார் தான் கையாள வேண்டும் என்றும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது.







