ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள், விரும்பினால் வேறு எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.
உடல்நிலை காரணமாக கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அறிவித்திருந்தார். அவரது அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி ரசிகர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தனது முடிவை ஏற்கனவே அறிவித்து விட்டதாகவும், அதனால் போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் ரஜினிகாந்த் வலியுறுத்தினார்.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைய விரும்பினால், மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு கட்சியில் இணைந்தாலும், அவர்கள் எப்போது ரஜினிகாந்தின் ரசிகர்கள்தான் என்பதை மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.







