டெல்லியில் டிராக்டரில் பேரணி சென்ற விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் எட்டப்படாததால் டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட விவசாயிகள் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். மத்திய அரசின் சார்பில் ராஜபாதையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் முடிந்த உடன் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், டெல்லியில் குடியரசு தினவிழா முடிவடைவதற்கு முன்பு காலை 8 மணிக்கே விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் பெரும் திரளாக நுழைய முயன்றனர். இதனால் சிங்கு எல்லை வழியாக டில்லியில் நுழைய முயன்ற விவசாயிகளை போலீசார் தடுக்க முயன்றனர். போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர்.
இந்நிலையில் போலீசாரின் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தடியடியையும் மீறி விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்துள்ளனர். அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், கொடிக்கம்பத்தின் மீது ஏறி அவர்களின் கொடியை ஏற்றியதால் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் போலீசாரும் திணறி வருகின்றனர்.
இதனிடையே போலீசார் நடத்திய தடியடியில் விவசாயி ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.