சென்னையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது இரு குழந்தைகளை ஏரியில் மூழ்கடித்து கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஞானவேல். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் ஐஸ்வர்யா (6), பூஜாஸ்ரீ(4) என்ற குழந்தைகளும் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஞானவேல் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று தனது இரு குழந்தைகளுடன் வெளியே சென்ற அவர் வீடு திரும்பாததால் இது குறித்து அவரது மனைவி ஜெயந்தி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மறைமலை நகர் அருகே உள்ள ஏரியில் 2 குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவர் சடலமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து முதற்கட்ட விசாரணையை துவக்கினர். அதில், ஆற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் காணாமல் போன ஞானவேல் மற்றும் அவரது 2 குழந்தைகள் என்பதும் தெரிய வந்தது. மேலும், இவரது தற்கொலைக்கு குடும்ப தகராறு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
Advertisement: