விவசாயிகளுக்காக அறப்போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது ஆளுங்கட்சி பொய் வழக்குகள் போட்டு அச்சுறுத்த நினைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு தடை விதிக்கக்கோரி வெற்றிகரமாக நடைபெற்ற உண்ணாவிரதம் ஆளும் திமுகவை அதிரச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மக்கள் ஆதரவுடன் நடைபெற்ற இந்த போராட்டம் மகத்தான வெற்றி பெறும் என்று எதிர்பார்க்காத ஆளும்கட்சி, மக்கள் நலன் காக்கும் போராட்டங்களை நடத்த விடாமல் தடுப்பதற்காக, பாஜக தொண்டர்களை அச்சுறுத்த நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாகவே, போராட்டத்தில் பங்கேற்ற 10-க்கும் மேற்பட்டோர் மீது பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அவர்களது வேகம் குறைந்துவிடும் என திமுக அரசு சிந்திக்கிறது. ஆனால், பொது நலனுக்காக போராடும் பாஜக தொண்டர்களின் மனவலிமை மகத்தானது என்றும், பொய் வழக்குகளை பொடி பொடியாய் தகர்த்துவிட்டு புதுப்பொலிவுடன் அவர்கள் மீண்டும் களத்துக்கு வருவார்கள் என்றும் அந்த அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.







