நீட் தேர்வு எழுத வரும் தேர்வர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2022-2023ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவர் படிப்புகளுக்கு தமிழ், இந்தி உள்பட 13 பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது கொரோனா பரவல் மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் நீட் தேர்வு எழுத வரும் தேர்வர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தேர்வு எழுத வரும் தேர்வர்கள் ஹால்டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
முகக்கவசம் அணியாமல் வரும் தேர்வர்களுக்கு N95 முகக்கவசம் வழங்கப்படும். மேலும், வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெப்பநிலை அதிகமாக உள்ள தேர்வர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுதலாம். தேர்வு முடிந்த உடன் ஹால் டிக்கெட்டையும் தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த தேர்வர்களின் விடைத்தாள் திருத்தப்படாது. 17-ம் தேதி பகல் 1.30 மணிக்கு மேல் வரும் எந்த தேர்வருக்கும், தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.