பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் கருத்துகளைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில் மேலும் 2 வாரம் (ஜூலை 28 வரை) கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென மதச் சட்டங்களை பின்பற்றுகின்றன. அவற்றுக்குப் பதிலாக எல்லோரும் பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக அரசு பல ஆண்டுகளாக கூறி வருகிறது. அதாவது, அனைத்து மதத்தை சோ்ந்தவா்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பாக நாடு முழுவதும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இதற்கு பல வகையில் ஆதரவுகளும் எதிா்ப்புகளும் எழுந்துள்ளன.
அதனைத் தொடா்ந்து, இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு சட்ட ஆணையத்தை மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் கருத்துகளை கேட்டறிந்த 21வது சட்ட ஆணையம், அது தொடா்பான ஆலோசனை அறிக்கையை கடந்த 2018-ம் ஆண்டு வெளியிட்டது. ஆனாலும், தொடா் எதிா்ப்பு, நீதிமன்ற வழக்குகள் காரணமாக இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை உருவானது.
21வது சட்ட ஆணையத்தில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. அண்மையில் இந்த பொது சிவில் சட்டத்தின் அவசியம் மற்றும் அதன் மீது பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடம் இருந்து புதிதாக கருத்துகளைக் கேட்க பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் 22வது சட்ட ஆணையம் கொண்டுவரப்பட்டது.
இந்த 22வது சட்ட ஆணையத்தின் பணிக்காலம் 3 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கும் பணியை இந்த ஆணையம் கடந்த ஜூன் 15-ம் தேதி தொடங்கியது. ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டுள்ளதாகவுகம், ஆன்லைனில் மட்டுமின்றி, காகித வடிவிலும் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாகவும் சட்ட ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்றுடன் இந்த கருத்து கேட்கும் பணி நிறைவடையும் தருணத்தில், இந்த கருத்து கேட்கும் பணியில் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டதை அடுத்து மேலும் 2 வார காலம் (ஜூலை 28 வரை) நீட்டித்து சட்ட ஆணையம் உத்தரவிட்டுள்ளது.







