அஜித் பவாருக்கு தேவேந்திர பட்னாவிஸ் கவனித்து வந்த நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தன. இந்நிலையில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.
இதனையடுத்து மகாராஷ்ட்ராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே விரிசல் ஏற்பட்ட நிலையில், 40 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவளிப்பதாக அஜித் பவார் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, மகாராஷ்டிராவின் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சோ்ந்து அக்கட்சியைச் சோ்ந்த 8 எம்எல்ஏ-க்கள் மாநில அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
இந்நிலையில் சரத்பவார் தலைமையில் இன்று தேசியவாத கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அஜித் பவாருக்கு தேவேந்திர பட்னாவிஸ் கவனித்து வந்த நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனில் பாட்டீலுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, பேரிடர் மேலாண்மை துறையும், அதிதி சுனில் தட்கரேக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையும், தனஞ்சய் முண்டேவுக்கு விவசாயத் துறையும், திலீப் வால்ஸ் பாட்டீலுக்கு வருவாய், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அமைச்சர்களாகப் பதவியேற்ற 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.







