ஆப்கானிஸ்தானில், காபூல் நகரில் இன்று குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். ஆப்கானிஸ் தானியர்களும் தலி பானின் அடக்குமுறைகளுக்குப் பயந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர்.
இதனால் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை வெளியேற்றி இருப் பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மீட்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத் தில் உயிரிழப்பு தாக்குதல் நடத்தினர். இதில், அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 13 பேர் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை அமெரிக்கா குண்டுவீசி தாக்கி கொன்றது.
இதற்கிடையே, இன்னும் 24-36 மணி நேரத்துக்குள் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று எச்சரித்திருந்தார். இந்நிலையில், இப்போது காபூல் நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து உள்ளூர் மீடியா செய்தி வெளியிட்டுள்ளன. இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக ஏதும் தெரியவில்லை.








