ராகுல்காந்தி எம்.பியுடன் சிறப்பு நேர்காணல்!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பியிடம் நியூஸ்7 தமிழின் இணையாசிரியர் தியாகச்செம்மல் நடத்திய சிறப்பு நேர்காணலின் எழுத்து வடிவில் மரிய ரீகன் சாமிக்கண்ணுவின் மொழியாக்கம். தியாகச்செம்மல்: நியூஸ் 7 தமிழ் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சிக்கு…

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பியிடம் நியூஸ்7 தமிழின் இணையாசிரியர் தியாகச்செம்மல் நடத்திய சிறப்பு நேர்காணலின் எழுத்து வடிவில் மரிய ரீகன் சாமிக்கண்ணுவின் மொழியாக்கம்.

தியாகச்செம்மல்: நியூஸ் 7 தமிழ் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சிக்கு மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இந்த நேர்காணலுக்கு சம்மதம் தெரிவித்ததற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராகுல் காந்தி: நேர்காணலுக்கு என்னை அழைத்ததற்கும் நன்றியை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தியாகச்செம்மல்: தேர்தலுக்கு முன்பிருந்தே, நீங்கள் தமிழ் நாட்டின் அரசியல், மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கிறீர்கள். இதுவரை தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக தேர்தல் பரப்புரைக்காக சுற்றுப்பயணம் செய்துள்ளீர்கள். தமிழ்நாட்டில் அதிக கவனம் செலுத்த ஏதாவது தனிக்காரணங்கள் உண்டா?

ராகுல் காந்தி: தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை. தமிழ்நாடு மட்டுமில்லை. குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இதே போன்று பிரச்சாரங்கள் செய்துள்ளேன். இந்தியா என்பது பல மாறுபட்ட கலாச்சாரம், பல மாறுபட்ட சிந்தனைகள், பல மாறுபட்ட மொழிகள் கொண்ட நாடு. இந்த பன்முகத்தன்மைக்கு உரிய மதிப்பளித்து, போற்றி அவற்றை வலிமைப்படுத்த வேண்டும். இவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு பயணிக்க வேண்டும். எந்த ஒரு குறிப்பிட்ட மையக்கருத்தையும், சிந்தனையையும் திணித்து பாரம்பரியங்களை சிதைக்க கூடாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தனிச்சிறப்பு கொண்ட வரலாறு, தனிச்சிறப்பு கொண்ட கலாச்சாரம், தனிச்சிறப்பு கொண்ட பாரம்பரியம், தனிச்சிறப்பு கொண்ட மொழி உள்ளது. இவற்றை போற்றி பாதுகாக்க வேண்டும். ஆனால், இந்த சிறப்புகளுக்கெல்லாம் முதல் முறையாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிடமிருந்து அச்சுறுத்தல் வந்துள்ளது.

தியாகச்செம்மல்: மற்ற மாநிலங்களைக்காட்டிலும், காங்கிரஸ் கட்சிக்கு 2019 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக ஆதரவு கிடைத்தது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே காங்கிரஸ் கட்சி மீது தமிழக மக்கள் மிகுந்த அன்பு கொண்டுள்ளார்கள். பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு இவ்வளவு ஆதரவு எதனால் கிடைக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ராகுல் காந்தி: தற்போது நாட்டில் கருத்தியல் ரீதியாக புதிய யுத்தம் ஒன்று நடக்கிறது. இது ஒரு பழைய சித்தாந்த போர். இந்த யுத்தம் காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். என்ற இரு அமைப்புகளுக்கு இடையே நடக்கிறது. இந்தியாவில் பல ஒருங்கிணைந்த மாநிலங்கள் உள்ளதாக காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களும் தனித்தன்மையுடன் சமமான மரியாதையுடன், அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. காங்கிரஸை பொறுத்தவரை இந்தியா என்பது பலதரப்பட்ட மலர்களைக்கொண்ட அழகான பூச்செண்டு. இதை பாதுகாக்க வேண்டும். இந்த பூச்செண்டில் உள்ள ஒவ்வொரு மலர்களும் தனித்தன்மை வாய்ந்தவை. மலர்களில் சிறந்தது, நல்லது, கெட்டது என அலசி ஆராயக்கூடாது என்பதே காங்கிரசின் நிலை. ஆனால் பாஜக பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தமானது. பூச்செண்டில் உள்ள ஒவ்வொரு மலர்களும், நடுவில் உள்ள ஒரு மலரின் கீழ் செயல்பட வேண்டும் என கருத்தைத் திணிக்கிறது. நரேந்திர மோடி அரசாங்கம் சொல்கிறது.

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பாரம்பரியம், ஒரே மொழி, ஒரே மதம் என எல்லாவற்றிலும் திணிக்கிறது. இது இந்தியா அல்ல. இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரம், பல்வேறு வரலாறு, பல்வேறு பாரம்பரியங்கள் கொண்ட நாடு இது. பாஜக ஒற்றை சித்தாந்தத்தை மக்கள் மீது திணிப்பதை தமிழக மக்கள் புரிந்து வைத்துள்ளனர். பாஜக அராஜக போக்கை நடத்துகிறது. இது தமிழக மக்களுக்கு எரிச்சலூட்டுகிறது.

தியாகச்செம்மல்: சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடி மட்டுமின்றி, பாஜகவின் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள், கூட தமிழ் பற்றியும், கலாச்சாரம் குறித்தும் அதிக அளவில் பேசி வருகிறார்கள். தமிழ் கலாச்சார தாக்குதலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறீர்கள். அரசியல் கட்சிகள் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றி பேச உரிமை உண்டு தானே?

ராகுல் காந்தி: எல்லோராலும் பேச முடியும். ஆனால், செய்வது யார்?. செயல் தான் முக்கியம். பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து பேசுகிறார். பிரதமர் மோடி நம்பும் சித்தாந்தம் தானே காந்தி இறப்புக்கு காரணம்.

நரேந்திரமோடி நம்பும் சித்தாந்தத்திற்கு எதிராக தான் அம்பேத்கர் வாழ்நாள் முழுவதும் போராடினார். நரேந்திரமோடி நம்பும் கருத்தியலுக்கு எதிராக அம்பேத்கர் நிறைய எழுதியுள்ளார். ஆனால், நரேந்திரமோடி அம்பேத்கரையே புகழ்கிறார்.

தலித் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறார். அங்கு தான் தாக்குதலும் நடக்கிறது. இந்திய அரசியலமைப்பு சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தினால் அதில் தான் மோடி தாக்குதலும் நடத்துகிறார். ஒரே நாடு, ஒரே வாக்கு என்றார் காந்தி. இந்திய அரசியலமைப்பை காந்தி கூறினார். ஆனால் நரேந்திரமோடி, அரசியலமைப்பின் மீது தினமும் தாக்குதல் நடத்துகிறார். மறுபக்கத்தில், காந்தியை புகழ்வதாக மோடி சொல்கிறார். தமிழ் கலாச்சாரத்தை மதிப்பதாக கூறுகிறார். ஆனால், உண்மையில் அப்படி நடந்து கொள்கிறாரா? செயல்தான் உங்கள் வார்த்தையை பிரதிபலிக்க வேண்டும்.

தியாகச்செம்மல்: பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை தீர்மானித்த இருபெரும் ஆளுமைகள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்த 2021 தேர்தல் நடக்கவிருக்கிறது. அரசியல் தலைமையில் வெற்றிடம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். ஒரு தேசிய தலைவராக இதுபோன்ற அரசியல் வெற்றிடம் இருப்பதாக உணர்கிறீர்களா?

ராகுல் காந்தி : நாம் ஏற்கனவே பேசிக்கொண்டிருந்த போது, உங்கள் மகன்/மகள் பெயர் என்னவென்று கேட்டேன். நீங்கள் செவ்வியன் என்று கூறினீர்கள். செவ்வியன் என்பதற்கான அர்த்தத்தை விளக்கம் அளித்தீர்கள். செவ்வியன் என்றால் முழுமையான மனிதன். இது சிறந்த கருத்து. பாஜக தமிழ் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது.

முதலமைச்சர் இதற்கு எதிராக எதாவது பேசினாரா? ஊழலில் முதல்வர் சாதனை படைத்துள்ளதாக நான் புரிந்து வைத்துள்ளேன். முதலமைச்சரை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மோடியிடம் இருக்கிறது. இவர் முழுமையான முதலமைச்சரா? நீங்கள் செய்வது தவறு என பிரதமர் மோடியிடம் ஒருமுறையாவது முதலமைச்சர் கூறினாரா? ஒரு முழுமையான செவ்வியன் போல, நமக்கு முழுமையான ஒரு முதலமைச்சர் வேண்டும்.

மக்களுக்கு பொறுப்பான முதல்வர், மக்களின் குரலைக் கேட்க வேண்டும். தமிழ், இந்திய மதிப்பீடுகளை பாதுகாக்க வேண்டும். ஒரு இந்தியராகவும், தமிழராகவும், முதலமைச்சர் செயல்படவில்லை. அதனால் தான் முழுமையான முதல்வர் வேண்டும் எனகூறுகிறேன். அதிமுகவில் அது இல்லாமல் இருக்கிறது.

தியாகச்செம்மல் : உங்களுடைய அனுபவத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தேவை? எந்த குறிப்பிட்ட பிரிவில் அரசியல் கட்சிகள் மக்களிடம் பேச வேண்டும் என நினைக்கிறீர்கள்?

ராகுல் காந்தி : தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுமைக்கும் தற்போது வேலையில்லா திண்டாட்டம் பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்தியாவில் உள்ளது போலவே தமிழகத்திலும் வேலையின்மை நிலவுகிறுது. நேற்று சிலரை சந்தித்து உரையாடினேன். அவர்கள் காமராஜரின் மதிய உணவு திட்டத்தை பற்றி கூறினார்கள். காமராஜருக்கு மதிய உணவு திட்டம் எங்கிருந்து சிந்தனையில் உதித்தது.
தமிழக கிராமத்திலிருந்து காமராஜர் பெற்றுக்கொண்டார். ஏழை மக்கள் காமராஜருக்கு அதை எடுத்து கூறினார்கள். அதனால் மதிய உணவு திட்டத்தை காமராஜர் செயல்படுத்தினார். இது தவறான திட்டம் என்றோ, பணத்தை வீணடிப்பதாகவோ, யாரும் கூறமுடியாது.

இந்த சிந்தனைதான், ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் இன்று பயன் அளிக்கிறது. அந்த வழிகாட்டுதலை தான் தமிழ்நாடு எடுக்கவேண்டும் என நினைக்கிறேன். தமிழ்நாடு இந்தியாவை புதிய கோணத்தில் வழிநடத்துகிறது. நரேந்திரமோடி இந்தியாவை தவறான பாதையில் கொண்டு செல்கிறார். அதனை சரிசெய்தால் வேலை வாய்ப்பின்மை குறையும்.

தியாகச்செம்மல்: தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிற்கே வேலைவாய்ப்பு பெருக வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் வெற்றிநடை போடும் தமிழகம் என தமிழ்நாடு அரசு விளம்பரப்படுத்தி வருகிறது. அது குறித்து உங்கள் கருத்து என்ன? உண்மையிலேயே வெற்றிப்பாதையில் பயணிக்கிறதா தமிழ்நாடு?

ராகுல் காந்தி : மோடியால் எந்த பயனும் இல்லை என சிலர் என்னிடம் கூறினார்கள். ஆனால், அதில் நான் உடன்பட மாட்டேன். அவர் மிகச்சிறப்பானவர். பிரதமர் மோடி பயனற்றவரெல்லாம் இல்லை. அவர் பயனுள்ளவர் தான். ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே மோடி பயனுள்ளவராக இருக்கிறார். நான் ஒத்துக்கொள்கிறேன். தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது. ஆனால், யாருடன் வெற்றி நடைபோடுகிறது?. வெற்றி என்பது யாருக்கு? ஊழலுடன் தான் இந்த அரசு வெற்றி நடைபோடுகிறது. பிரதமர் மோடியுடன் கூட்டணி வைப்பதில் தான் இந்த அரசு வெற்றி நடைபோடுகிறது.
தமிழ்நாடு மக்களுடன் வெற்றி நடை போடவில்லை.

தமிழ்நாட்டு விவசாயிகளுடன் வெற்றி நடைபோடவில்லை. ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வணிகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சொல்கிறார்கள். இதற்குக் காரணம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. எங்கள் வர்த்தகத்தை பாதித்து விட்டீர்கள் என விவசாயிகள் கேட்கிறார்கள்.ஆனால் முதல்வர் வாய் திறக்கவேயில்லை. அந்த மனிதர்கள் தினமும் அழுகிறார்கள். தமிழக விவசாயிகளுக்கு வெற்றியில்லை. இது ஊழலுக்கு வெற்றி. இது மோடியின் வெற்றி.

தியாகச்செம்மல்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் மற்றும் இரண்டாம் ஆட்சிகளில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினீர்கள். இப்போது அப்படி இல்லை. தமிழ்நாடு கூட அதிக பலன் அடைந்தது. கிராமப்புறங்களில் காங்கிரஸ் கட்சியின் திட்டம் வளர்ச்சி அடைந்தது. கிராமப்புற மக்களுக்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள் பயன்படுத்தவில்லையா?

ராகுல் காந்தி: கிராமப்பஞ்சாயத்து, உள்ளாட்சித்துறை மூலமாக நாங்கள் திட்டங்களை செயல்படுத்தினோம். ஆனால் பாஜக அதை அதிகாரத்துவமாக மாற்றி விட்டது. அதுதான் எங்களுக்கும், அவர்களுக்குமான வித்தியாசம். நாங்கள் செயல்படுத்திய திட்டங்கள் ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை சீரமைத்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை (NREGA) செயல்படுத்திய போது, பல பொருளாதார நிபுணர்கள் இது உபயோகமற்றது என்றார்கள். விமர்சித்தார்கள்.
ஏழைமக்களுக்கு இலவசங்களை கொடுக்கிறீர்கள் என்றார்கள். அந்த வார்த்தையையே விரும்பவில்லை.

2014ம் ஆண்டுக்கு பிறகு பொருளாதார நிபுணர்கள் என்னை சந்தித்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தால் தான் பொருளாதாரமே வளர்ச்சி அடைந்தது என கூறினார்கள்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ஏழைமக்களுக்கு பணம் கொடுத்து வாழ்க்கை தரத்தை உயர்த்தியது. அதன் அடிப்படை கூட மோடியால் புரிந்துகொள்ள முடியவில்லை.ஏழை மக்கள் மத்தியில் பணப்புழக்கம் வேண்டும் என்பது கூட, மோடிக்கு புரியவில்லை. சிறு,குறு வியாபாரிகள் கையிலும் பணம் புழங்க வேண்டும். இது இல்லையென்றால் இந்தியா வளராது. வேலை வாய்ப்பு பெருகாது. உங்களோடு அமர்ந்து இருக்கிறேன். நாம் பேசிய போது, உங்கள் தந்தை நடத்துனராக இருப்பதாக கூறினீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா என்றேன். ஆம் என்றீர்கள் . நீங்கள் வெற்றி அடைந்து விட்டீர்கள்.

இந்த வழியில் தான் இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்று கூறுகிறேன். நம்முடைய மூலதனமே மக்கள்தான். ஆனால் அந்த மூலதனத்தை பயன்படுத்த தவறிவிட்டார்கள். நம் மதிப்பு மிக்க மூலதனம் நம்மக்கள். ஆனால் நாம், நினைக்க கூட முடியாத அளவிற்கு நிறைய பேர் ஏழைகளாக உள்ளார்கள். அவர்கள் மேலே வருவது முக்கியம். அவர்கள் பலமாவது இங்கு முக்கியம். அதுதான் உண்மை வளர்ச்சி. இருவர் மட்டும் வளர்வது வளர்ச்சியல்ல. எல்லோரும் வளர்வது தான் முக்கியம்.

தியாகச்செம்மல்: ஏழைமக்களுக்கு ரூ.6,000 தரவேண்டும் என்பது காங்கிரஸ் கட்சி அறிவித்த முக்கிய திட்டம். ஆனால் அதை பாஜக செயல்படுத்தவில்லை. அந்த திட்டம் ஏன் மக்களிடம் செயல்படுத்த படவில்லை என நினைக்கிறீர்கள்?

ராகுல் காந்தி: கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தே சென்றார்கள். பேருந்து கட்டணம், ரயில் கட்டணமாக ரூ.200 கேட்டார்கள். அரசு அதை தரமறுத்தது. அவர்கள் அழும்போது, நான் அவர்களை சந்தித்தேன். ஒரு எச்சரிக்கை கூட கொடுக்காமல் நாட்டையே முடக்கினார்கள். அதேசமயம் ஒரு லட்சத்து 50ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை குறிப்பிட்ட 5 முதல் 10 பெருமுதலாளிகளின் வரியை ரத்து செய்தார்கள்.

மோடியை ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது அவர்கள் தானே.ஏழை மக்களா விளம்பரப்படுத்துகிறார்கள்? தன்னை விளம்பரப்படுத்தும் பெருமுதலாளிகளின் வரியை பிரதமர் மோடி ரத்து செய்கிறார். அதனால்தான், ஏழைகளுக்கு அவர் உதவவில்லை. காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்கள் நடைமுறையில் இருந்தால், கொரோனாவால் நேரிட்ட பொருளாதார பாதிப்பு பெரிதாக இருந்திருக்காது.

தமிழாக்கம் – மரிய ரீகன் சாமிக்கண்ணு

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.