சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழையை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் உபரிநீர் திறக்கப்பட இருப்பதால், கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது.
இந்நிலையில், சென்னையின் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கே.கே.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், செங்குன்றம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் மழை தொடர்கிறது. மேலும், செங்கல் பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் 10-ம் தேதி வரை மழை தொடரும் எனவும், அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகம் 1.30 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி கரையை ஒட்டிய கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புழல் ஏரியும் நிரம்பியுள்ளதால் இன்று 11 மணியளவில் அங்கும் உபரி நீர் திறக்கப்படுகிறது.







