அனைவரும் வாருங்கள் என அழைப்பதற்கு ஓபிஎஸ்-க்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை எனக் கூறிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஓபிஎஸ்-யை கடுமையாகச் சாடியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஓபிஎஸ் சுயநலவாதி, அனைவரும் வாருங்கள் என அழைப்பதற்கு ஓபிஎஸ்-க்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு இருவரும் கையொப்பம் இட்டு தான் அனைவரையும் அழைத்தார்கள் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுக்குழுவுக்கு முந்தைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கருத்து இருந்தது. இதற்கிடையில் பல்வேறு வகையில் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட ஆரம்பித்தார் எனத் தெரிவித்தார். மேலும், கட்சி தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசிக்காமல் மூன்றாவது நபரைப் போல நீதிமன்றம் சென்றார் ஓபிஎஸ் எனக் குற்றம்சாட்டிய அவர், அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருந்தவர் அதிமுகவுக்காக எந்தத் தியாகமும் செய்யாதவர் எனச் சாடினார்.
ஏதோ ஒரு சூழ்நிலையில் கிடைத்த வாய்ப்பால் சட்டமன்ற உறுப்பினர் ஆகி வருவாய்த்துறை அமைச்சராகினார் எனத் தெரிவித்த அவர், சூழ்நிலையால் அவரை ஜெயலலிதா முதலமைச்சர் ஆக்கினார் எனக் கூறினார். மேலும், உண்மையான தொண்டர்கள் தலைமை கழகம் சென்றிருந்தால் தலைமை அலுவலகத்திற்குச் சிறு மாசு கூட ஏற்பட அனுமதித்திருக்க மாட்டார்கள் எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘புதுச்சேரியில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வாகனம் முற்றுகை!’
தொடர்ந்து பேசிய அவர், தலைமை அலுவலகத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர். இதனால்தான் ஓபிஎஸ் எங்களை அழைப்பதற்கான தார்மீக உரிமையை இழக்கிறார்கள் எனக் கூறினார். மேலும், அதிமுகவில் இருப்பதற்கு எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது நபராக ஒபிஎஸ் இருக்கிறார் எனத் தெரிவித்த அவர், அப்படிப்பட்ட நபரை விமர்சிக்கக் கூட நாங்கள் வெட்கப்படுகிறோம். ஓபிஎஸ் அரசியலில் இருப்பதற்கு எந்தவித தார்மீக அடிப்படையும் இல்லை எனக் கூற கடமைப்பட்டுள்ளேன் எனக் கூறினார்.
ஓபிஎஸ் தன்னுடைய சுயநலத்திற்காகக் கட்சியையும், கட்சித் தலைமையையும் பயன்படுத்தியுள்ளார் அதேபோல் சசிகலாவையும் பயன்படுத்தி இருக்கிறார். எனத் தெரிவித்த அவர், ஓபிஎஸ்-க்கு சுயமாகச் சிந்திக்கத் தெரிகிறதோ இல்லையோ சுயநலமாக இருக்கிறார் எனக் கூறினார்.








