பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவர் லெப்டினட் ஜெனரல் பயாஸ் ஹமீதை கைது செய்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
குடியிருப்பு திட்டம் ஊழல் தொடர்பாக அவருக்கு எதிராக ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயாஸ் ஹமீது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தம்மிடம் 4 கோடி ரூபாய் வரை பறித்ததாக டாப் சிட்டி குடியிருப்பு திட்டத்தின் தலைவர் மொயிஸ் அகமது கான் கடந்த 2023ஆம் ஆண்டில் குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் ராணுவ சட்டத்தின்படி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஐஎஸ்ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர் பயாஸ் கான். கடந்த 2019-இல் ஐஎஸ்ஐ தலைவராக இருந்த அசீம் முனிருடன் கருத்துவேறுபாடு எற்பட்டதால் பதவிக் காலம் முடிவதற்கு முன்னரே அவரை நீக்கிவிட்டு, உளவு அமைப்பின் தலைவராக பயாஸ் ஹமீதை இம்ரான் கான் நியமித்ததாகக் கூறப்படுகிறது.







