மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘தனி ஒருவன்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2ம் பாகத்துக்கான அறிவிப்பு மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. நயன்தாரா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், கனேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் அப்போதே ரூ.100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்தது. ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா ஆகியோர் எங்கு சென்றாலும் அவர்களை சூழ்ந்து காெள்ளும் ரசிகர்கள் ‘தனி ஒருவன் 2’ அப்டேட் குறித்து கேள்வி எழுப்புவது வழக்கம்.
இப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தின் வில்லன் அரவிந்த் சாமி அந்த பாகத்திலேயே இறந்து விட்டதால் ஒரு தமிழ் முன்னணி நடிகரை வில்லனாக நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
https://twitter.com/Ags_production/status/1695792739957489863
சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் இன்று மாலை தனி ஒருவன் படத்தின் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அப்போது 2-ம் பாகம் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.







