அதிமுக விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது சரியாக இருக்காது என ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்ககோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றம் சென்றனர். அங்கு சென்னை உயர்நீதிமன்றமே இதற்கு தீர்ப்பளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உத்தரவிடப்பட்டது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எம்.பி.தேர்தலுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆயத்தமாக உள்ளதாகவும், எம்.பி. தேர்தலில் கூட்டணி குறித்தும், தான் போட்டியிடுவது குறித்தும் அன்றைய சூழலில் முடிவெடுப்போம் என்றும் கூறினார். மதுரையில் அமைச்சரின் கார் மீது காலணி விசிய சம்பவம் வன்மையாக கண்டிக்க வேண்டியது என தெரிவித்த அவர், அதிமுக விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது சரியாக இருக்காது என கருத்து தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








