”உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்” என தன்னுடைய அம்மா சொன்னதைக் கேட்டபோது அடிவயிறு கலங்கியதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி ட்விட்டரில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
கட்சிப் பணி, மக்கள் பணி என தீவிரமாக களமாடி வருபவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன். பொதுவாழ்க்கைக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அவர், திருமணம் கூடச் செய்து கொள்ளாமல், தன் கொள்கை தம்பிகளுடன் இரு கரம் கோர்த்து, மக்கள் நலப் பணிகளை செய்வதிலேயே மகிழ்ந்து வருபவர்.
அரசியல் பயணத்தில் அவரின் கணீர் குரல் இருந்தாலும், குடும்பம் எனும்போது மனதளவில் சோர்ந்து உடைந்துபோய் விடுகிறார் என்பதனை அவரின் அக்கா இறந்தபோது பார்க்க முடிந்தது. இந்நிலையில், அவரின் அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தம்முடைய டிவிட்டரில் தெரிவித்துள்ள திருமாவளவன், தம்முடைய அம்மா தம்மிடம் கூறியதை அப்படியே பகிர்ந்துள்ளார். “#அம்மா: “ஊர்ல என்ன அநாதையா போட்டுட்டு நீ ஊர சுத்திக்கிட்டுருக்கிற; திடீர்னு எனக்கு நெஞ்ச அடச்சுகிட்டு ஆவி பிரியுற மாதிரி வலி வந்துச்சு; நானே முயற்சி பண்ணி நடுராத்திரில ஆஸ்பத்திரிக்குப் போனேன். உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்” அம்மா இப்படி சொன்னபோது அடிவயிறு கலங்கியது” என தன்னுடைய அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு மனம் உடைந்து பதிவிட்டுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘ஆண்ட்ராய்டிலிருந்து iPhone-க்கு WhatsApp chats மாற்றலாம்!’
https://twitter.com/thirumaofficial/status/1540404346457796608
அம்மாவுக்கு என்ன நடந்தது என்பதனை தெரிவிக்கும் வகையில் அவர் பதிவிட்டு இருந்த மற்றொரு பதிவில், ”எண்பதை நெருங்கும் வயது. திடீரென அம்மாவுக்கு நெஞ்சுவலி. ஓரிரு நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது. அம்மாவை அவசரமாக திருச்சிக்கு அழைத்துச் சென்றபோதுதான் தகவலறிந்து சென்னைக்கு அழைத்து வர செய்தேன். சூன் 22 மாலை நடந்த ஆஞ்சியோ சோதனையில்தான் அவருக்கிருந்த ஆபத்து தெரியவந்தது. இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்ததைக் கண்டறிந்து ஓரிடத்தில் மட்டும் அடைப்பு நீக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டம் அமைவதற்கு ஏதுவாக ‘ஸ்டென்ட்’ எனும் ஒன்றைப் பொருத்தியுள்ளனர். இது அறுவை சிகிச்சை அல்ல. ஆனாலும் இது ஒரு சவாலான மருத்துவப் பணி. மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/thirumaofficial/status/1540408411715604481
இதற்கு முன்னதான பதிவில், ”அம்மாவை உடனடி ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ள வணங்குதற்குரிய மருத்துவர் கே.என்.ரெட்டி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்த நெருக்கடியான நேரத்திலும் அம்மாவுடன் இருக்க இயலவில்லை என்பது குற்ற உணர்வாக நெஞ்சை நெருடுகிறது. தோழர்கள் ஓரிரு நாட்களாவது தேடிவருவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார். இதையனையடுத்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பியின் அம்மா விரைந்து நலம் பெற வேண்டுமெனப் பலரும் தங்களின் விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றனர்.







