ஊழல் – முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் – முறைகேடுகள், குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதமே அனுமதி கேட்டிருப்பதாகவும், தமிழ்நாடு அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்,
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மிக கடுமையான ஊழல் மற்றும் முறைகேடுகள் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர் எஸ்.பி. வேலுமணி என்று குறிப்பிட்டுள்ள கே.பாலகிருஷ்ணன், எஸ்.பிவேலுமணி வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளுக்கு பின்பு அவர் மீதான வழக்கில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என்றும் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதே போன்று எந்தவொரு ஊழல் மற்றும் முறைகேடுகளை அமைச்சர் மட்டுமே செய்து விட முடியாது என்று கூறியுள்ள கே.பாலகிருஷ்ணன், அதிகாரிகள் அதற்கு துணைபோவதும், பங்குதாரர்களாக இருப்பதும் பல நேர்வுகளில் வழக்கமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். .
திட்ட மதிப்பீடுகளின் போது வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக, உத்தேச மதிப்பீடுகளை தாறுமாறாக நிர்ணயித்து அதன் மூலம் பல அதிகாரிகள் ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் துணை போனதாக ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு 2021ம் ஆண்டு நவம்பர் மாதமே அனுமதி கேட்டதாகவும், ஆறு மாதங்கள் கடந்துவிட்ட பிறகும் தமிழ்நாடு அரசு அதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று சொல்லப்படுவதாகவும் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக ஊழல் – முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதியளித்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கை விரைவுபடுத்துவதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.







