ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வின் நிலைப்பாடு பிப்ரவரி 7ம் தேதி அறிவிக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடுகின்றன. அதிமுக இரு அணிகளாக பிரிந்து போட்டியிடுகின்றது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓபிஎஸ் அணியில் அவரது தீவிர விசுவாசியான செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக பாஜக தனது நிலைபாட்டை இதுவரை அறிவிக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
நேற்று அவசர பயணமாக தமிழக பாஜக தலைவர் டெல்லி சென்றார். டெல்லியில் இருந்து திரும்பியவுடன் முதலாவதாக எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்துள்ளார். அதேபோல இன்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் பாஜக வின் தமிழக பொறுப்பாளரான சி.டி.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஓபிஎஸ் ஐ சந்தித்தனர்.
இதன் பின்னர் ஈரோடு இடைத் தேர்தலில் தங்களது முடிவு தொடர்பாக நண்பகளுக்குள் அறிவிப்பதாக தெரிவித்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் சென்னை டி நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது..
” 1972 ல ஆதிமுக கட்சி ஆரம்பித்தபோது எம்.ஜி.ஆர் அவர்கள் தீய சக்தி என்ற
வார்த்தையை திமுகவை நோக்கி கூறினார். தமிழக மக்களுக்கு எதிராக தமிழக மக்கள்
கலாச்சாரத்திற்கு எதிராக திமுக இருக்கிறது என்று எம்ஜிஆர் சொன்னார்.
மக்களிடம் திமுக மிகப்பெரிய கெட்ட பெயரை வாங்கியுள்ளார்கள். தமிழக மக்கள்
திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக்கு எதிராக உள்ளார்கள். உறுதியான தேசிய ஜனநாயக
கூட்டணி மற்றும் ஒரு உறுதியான , நிலையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அமைய வேண்டும் என்று இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை சந்தித்தோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் உறுதியான, ஒரு சக்தியான ஒரு வேட்பாளர் தேவை. அதற்கு தேவை தனி தனியாக பிரிந்து இருக்கும் இரண்டு பேரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தோம்.
இதுதான் எங்களுடைய கருத்து. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 7ஆம் தேதி வரை இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே அணியாக ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட்டு திமுகவை வெல்ல வேண்டும் என்பதுதான் பாஜகவின் கருத்து.
இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு பாஜக மெலிடப் பொறுப்பாளர் சி டி ரவி கூறியதாவது..
”1972 ல் எம்ஜிஆர் தீய சக்திகளை வீழ்த்த அதிமுகவை உருவாக்கினார் . இப்போதும்
அதற்கான தேவை உள்ளது . ஒரு குடும்ப நலத்திற்காகவும் , தமிழக மக்களுக்கும்
தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராகவும் திமுகவின் செயல்பாடு உள்ளது.
தமிழ் மக்கள் திமுகவிற்கு எதிராக உள்ளனர். பண பலம் , ஆட்சி, அதிகாரத்தை தவறாக ஈரோட்டில் பயன்படுத்தி வருகின்றனர். திமுகவை வீழ்த்த ஒருங்கிணைந்த அதிமுக தேவை. ஈரோடு தேர்தல், தமிழக பிரச்சனைகள் குறித்து இருவரிடமும் பேசினோம் , இருவரையும் சமாதனப்படுத்த முயற்சித்து உள்ளோம்.
பிப்ரவரி 7 ம் தேதி வரை காத்திருப்போம். இருவரும் இணைய வேண்டும் என்பதே
எங்கள் விரும்பம். 7 ம் தேதி வரை நேரம் இருக்கிறது . தேசிய ஜனநாயக
கூட்டணியில்தான் அதிமுகவினர் இருக்கின்றனர்” என சி.டி.ரவி தெரிவித்தார்.
– யாழன்